கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் - பகுதி 2 : பிரஞ்சும் ஆங்கிலமும் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம்
Description
கனடா என்னும் பரிசோதனையின் மிகவும் சிக்கலான பிரச்சினை மூலமாக, பிரஞ்சு மொழிபேசும் கனடா மக்களுக்கும், கனடாவின் பிறமக்களுக்கும் இடையிலான பிளவு இருந்துவந்துள்ளது.
கியூபெக்கின் பிரஞ்சுமொழி பேசுவோர் அனைவரிடமும் பிரஞ்சு என்ற அடையாள உணர்வு ஆழமாக உள்ளது. அவர்களில் தனிநாட்டை அல்லது தனித்த இறைமையைக் கோருவோர், சமஷ்டி ஆதரவாளர் என்ற இரு பிரிவுகள் இருந்தாலும் யாவரும் பிரஞ்சு என்ற அடையாள உணர்வாலும், கியூபெக் ஒரு தனித்த தேசியம் (Nation) என்ற உணர்வாலும் ஒன்றுபட்டவர்களாய் உள்ளனர். பிரஞ்சு மொழி பேசுவோர் தனித்த ஒரு தேசிய இனமா இல்லையா என்ற விவாதம் கியூபெக்கிற்குள் நடைபெறுவதாகக் கொள்ள முடியாது. தனித்துவமான பிரஞ்சுத் தேசியம் அல்லது தேசிய இனமான கியூபெக்கியர் சுதந்திர நாடாகப் பிரிந்துபோக வேண்டுமா அல்லது கனடாவுக்குள்ளேயே தொடர்ந்து இருப்பதனால் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படுமா என்ற விவாதமே அங்கு நடைபெறுகிறது.
முதன் முதலில் கனடாவிற்குள் கால்பதித்த ஐரோப்பியர்கள் என்றால் அது பிரஞ்சுக்காரர்களே என்று கூறவேண்டும். யுத்தம் ஒன்றின் முடிவில் 1759 இல் வடஅமெரிக்காவிற்கான உரிமையை பிரான்ஸ் பிரித்தானியாவிற்கு விட்டுக்கொடுத்தது . இதன் பின்னர் பிரஞ்சுக்காரர்களிற்கும், பிரித்தானியாவிற்கும் பல இணக்கப்பாடுகள் ஏற்பட்டன. விட்டுக்கொடுப்புக்களும் நிகழ்ந்தன. பிரித்தானியர்கள் கனடாவின் கியூபெக் மக்களின் சில உரிமைகளைத் தயக்கத்தோடு, விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
1860களில் அத்திலாந்திக் கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியவை இணையும் செயற்பாட்டின் தொடர்ச்சியாக 1867 ஆம் ஆண்டில் கனடாவின் 'கொன்பெடரேசன்" உருவானது. ஒன்டாரியோ (கனடாவின் மேற்பகுதி) கியூபெக் (கனடாவின் கீழ்ப்பகுதி) நோவா ஸ்கொட்டியா, நியூ பிரன்ஸ்விக் ஆகிய மாநிலங்கள் சேர்ந்த 'கொன்பெடரேசன்' ஆக இது அமைந்தது. கனடா தேசத்தை கட்டியெழுப்பும் செயல்முறை 1867 முதல் 1949 வரை தொடர்ந்தது . பல புதிய மாநிலங்கள் கனடாவுடன் இணைந்தன.